தஞ்சாவூரான் பூண்டு அல்லது ரயில் பூண்டின் மகரந்தம்!

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சியும்….  எங்கள் பள்ளி மாணவர்களின் ரயில் பூண்டின்(தஞ்சாவூரான் பூண்டு)  மகரந்தத்தூள் அறியும் முயற்சியும்….

கடந்த 8.4.2018 ஞாயிறன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி  மன்னார்குடியில் நடைபெற்றது. இப்பயிற்சியை மதுரையைச் சேர்ந்த மொ.பாண்டியராஜன் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வழங்கினார்.

இப்பயிற்சியும், பயிற்சியின்போது வழங்கப்பட்ட ஒரு மடிப்பு நுண்ணோக்கியும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தப் பயிற்சியின் தகவல்களை மாணவர்களிடம் கூறி அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை கையாளும் விதம் பற்றிக் கூறினேன்.

உடனே அவர்கள் எங்கள் பள்ளியைச் சுற்றி இயற்கையாக வளரும் தஞ்சாவூரான் பூண்டு அல்லது ரயில் பூண்டு என்று பொதுவாக அறியப்படும் யூபோர்பியேசி(Euphorbiaceae) என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த Croton bonplandianus என்ற அறிவியல் பெயரும் கொண்ட சிறு பூண்டுவகைச் செடித் தாவரத்தின் பூக்களை ஆய்வு செய்ய முயன்றனர்.

அந்தப் பூவின் மகரந்தத் தூள்களை கண்ணாடி நழுவங்களில்( Glass slide) பொருத்தி உற்று நோக்கியபோது மகரந்தத் தூள்கள் வட்ட வட்டமாக அழகுறத் தெரிந்தது. இதனை மாணவர்கள் எல்லோரும் கண்டு களித்தனர்.

இதனை புகைப்படங்களாகவும் பதிவு செய்தோம். இதை இப்பதிவின் மூலம் உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி

ஆய்வகங்களில் பெரிய நுண்ணோக்கியைக் கொண்டு உற்றுநோக்குவதை 150 ரூபாய் அளவே மதிப்பு கொண்ட, எளிதில் கையாளக்கூடிய, எளிதாக எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய  காகிதங்களால் ஆன மடிப்பு நுண்ணோக்கியால் பதிவு செய்தது மிக்க மகிழ்வான தருணமாக அமைந்தது.

இந்த மடிப்பு நுண்ணோக்கியை வடிவமைத்த விஞ்ஞானி மனு பிரகாஷ் அவர்களுக்கும், பயிற்சியை சிறப்புற வழங்கிய தோழர் மொ.பாண்டியராஜன் அவர்களுக்கும், 15 ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில்  பயிற்சியை வடிமைத்து மதிய உணவுடன் சிறப்புற நடத்திக்காட்டிய திருவாரூர் அறிவியல் இயக்க மாவட்ட குழுவுக்கு மிக்க நன்றிகளை எங்கள் மாணவர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

One Comment Add yours

  1. Eden Educational Resource Centre says:

    அற்புதம் சார். குழந்தைகளை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அவர்களின் மனதுக்குள் அறியாமலே விஞ்ஞான ஞானம் வளரும். இது என் அனுபவம். வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பதிவை எதிர் நோக்குகிறேன்.
    அன்புடன்
    மொபா

Leave a Reply