வெடத்தக்குளத்தில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சின்னக்கிராம் வெடத்தக்குளம். இது மெயின் ரோட்டிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சரியான ரோடு கூட கிடையாது. பழைய பள்ளி வளாகம் சிதைந்து விட்டதால், புதிய கட்டடம் ஊருக்கு வெளியே புதிதாக கட்டப்பட்டுள்ளது. இப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்புவரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளியைச் சுற்றி உள்ள 3, 4 கிராமங்களிலிருந்து வருகின்றனர். பொதுவாக அங்க எந்த வேலையும் இல்லை. விவசாயம் மழை பெய்தால் மட்டும்தான். அதனால் பெரும்பான்மையானவர்கள் வேலை தேடி வெளியூர் சென்றுவிடுகின்றனர். ஊருக்குள் ஒரு பெட்டிக் கடை கூட இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மருத்துவத்திற்கும், சிறிய பொருட்களுக்கும் கூட சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராம்திற்குத்தான் செல்ல வேண்டும். பெரும்பான்மையான பெண்குழந்தைகளும். ஆண் குழந்தைகளும் 12ம் வகுப்புக்கு மேல் செல்வது இல்லை என்றே தெரிகிறது.அந்த ஊரில் இதுவரை ஒரு அரசு ஊழியர்கள் கூட இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இங்கு இன்னும் மூட நம்பிக்கையில் பெண்குழந்தைகளுக்கு பேய் ஓட்டுகிறோம் என்று சொல்லி அடித்துச் சித்ரவதை செய்வதையும், அறிவியலுக்கு புறம்பான விஷயங்களை முழுமையாக நம்பி அதில் தம்மை இணைத்து வதைத்துக் கொள்ளுவதையும் பார்க்க முடிந்தது. மதிய வேளையில் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பது கிடையாது.  தூரத்தில் பெண்குழந்தைகளை அனுப்புவது கிடையாது. இளவயது திருமணம் என மிகத்துயரம் நிறைந்த கிராமமாக இருப்பதை பார்க்க முடிந்தது. மடிப்பு நுண்ணோக்கி அவர்களுக்கு ஒரு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த பயிற்சி வளங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் பணி செய்யும் சமூக அறிவியல் ஆசிரியரின் முன் முயற்சியால் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சியை அப்பள்ளியில் நடத்தினேன். மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். அற்புதமான நிகழ்வு. மனசுக்கு நிறைவாக இருந்தது.

மடிப்பு நுண்ணோக்கியை மாணவர்களே தயாரித்துப் பயன்படுத்தும் வரை அவர்கள் நம்பவே இல்லை. இந்த பேப்பரில் எப்படி சின்ன பொருட்களை பார்க்க முடியும் என்று நினைத்திருந்தனர். மேலும் நான் சென்றதும், ஏதோ இவர் சில சிலேடுகளை வைத்துக் காட்டுவார் போல என்று நினைத்தார்களாம். அதுவும் எப்படி பார்க்க போகிறோம் என்று நினைத்தார்களாம். ஆனால் நடந்தது வேறாக இருந்தது. அவர்கள் மடிப்பு நுண்ணோக்கியை செய்து முடித்த பிறகு அதற்குள் மாதிரிகளை வைத்துப் பார்த்தபோது அசந்தே போனார்கள். இப்போது அறிவியல் ஆசிரியரும் கூட அசந்து போனார். இந்த அளவிற்கு இதுவரை எங்கள் பள்ளியில் உள்ள மைக்ராஸ்கோப்பில் பார்த்தது இல்லை. இது உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது என்றார்.

Leave a Reply