இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத்துறை( Department of Biotechnology) மற்றும் சர்வதேச மரபியில் பொறியியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்ப மையம் புதுடெல்லி (International Centre for Genetic Engineering and Biotechnology)இணைந்து தமிழகத்தில் உள்ள ஆதிராவிடர்கள் மற்றும் பழங்குடி மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு மடிப்பு நுண்ணோக்கி(Foldscopoe) வழங்கி உதவியுள்ளது. 32 பள்ளிகளுக்கு 1600 மடிப்பு நுண்ணோக்கியை கொடுத்து உதவியுள்ளது. இதற்காக இந்த நிறுவனங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் அடிப்படையில் முதல் பயிற்சி முகாம் மதுரை இளமனூரில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இரண்டு குழுக்களாக காலை ஒரு குழுவிற்கும், மாலை ஒரு குழுவிற்குமாக 100 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றார்கள்.
இந்த பள்ளியில் படிக்கும் நாடோடி மக்களின் குழந்தைகள் படித்துவருகிறார்கள். குறிப்பாக திருவிழாக்களில் கயிறுமீது ஏறி நடக்கும்குழு, சாட்டையடைத்து வாழும் குழு, குறி சொல்லும் குழு, நரிகுறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என பலவகை நாடோடிக்குழுக்களின் குழுந்தைகள் இங்கே படிக்கிறார்கள். அவர்களுக்குத்தான் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. இக்குழந்தைகள் 6 மாதம் பள்ளிக்கும் 3 முதல் 6 மாதம் வரை பிச்சை எடுப்பதற்காக வேறு வேறு ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றுவிடுவார்கள். அந்த குழந்தைகள் தமிழ் மட்டுமல்ல பல்வேறு மொழிகளை பேசுகிறார்கள்.
இந்த பயிற்சிக்குப் பிறகு அதில் ஒரு மாணவன் இதனை நான் கல்லூரி வரை எடுத்துச் செல்வேன் என்று சொன்னதே இந்த பயிற்சியின் வெற்றியாகும்.